தீபாவளி தீப ஒளித் திருநாள் பிறந்த கதை - முனைவர் ராஜ.கார்த்திக் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கோவை.

அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

தமிழர்களுடைய பண்டிகைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது சமீப காலமாக அந்நிய சக்திகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. துவக்கத்தில் பொங்கல் விழாவைப் பற்றி புறம் பேசினார்கள். அது அறுவடைத் திருநாள், அறிவின் திருநாள், உழைத்த விவசாயிகளுடைய வியர்வைக்கு வெகுமதி தரும் நாள் என்றெல்லாம் பரப்புரை மேற்கொண்ட பிறகு மதம் சாராத திருநாள் என்கிற வகையில் அனைத்து நாட்டினரும் மதத்தினரும் பொங்கலை ஏற்றுக்கொண்டார்கள். 


அதுபோல தற்போது தீபாவளி என்பது அவசியமற்றது என்றும், அதைக் கொண்டாடக் கூடாது என்றும், சிறுமதியாளர்கள் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். இதைத்தான் இளங்கோவடிகள், 

நீரலர் நீரலக் கூறினும் அறியாமை 
என்று அறிதல் வேண்டும் 

என்று சிலப்பதிகாரத்தில் எடுத்துரைத்தார். ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அது அவரது அறியாமை என்பது இளங்கோவடிகளுடைய விளக்கம். 

தீபாவளி என்றால் என்ன?.

இந்த உலகில் ஆரம்ப காலத்தில் இரவு நேரத்தில் ஒளி தருவதற்கு எந்த ஒன்றையும் நாம் கண்டு பிடிக்காமல் இருந்தோம். குறிப்பாக விளக்கு, மின்சார விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு போன்றவையெல்லாம் இல்லை. எனவே அந்தக் காலத்தில் மாலை 6 மணிக்குள் இரவு உணவை சமைத்துச் சாப்பிட்டு உறங்கச் சென்று விடுவார்கள். அதனாலேயே அதிகாலை 4 மணிக்கு அவர்களால் எழ முடிந்தது. 

அன்றொரு நாள் ஒரு தமிழச்சி, எள் என்கின்ற ஒரு விதையை ஆட்டாங்கல்லில் ஆட்டிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் ஆட்டங்கல்லுக்குப் பக்கத்திலிருந்த வெளிப்புற (விறகு) அடுப்பில் சமையலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏதோ வேலையாக அந்தத் தமிழச்சி அந்தப் பக்கம் சென்றுவிட்டார். திரும்ப வந்து பார்த்தபோது கரித்துணி என்று சொல்வோமே சூடான பாத்திரங்களை இறக்கி வைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு துணி, அது ஆட்டாங்கல்லில்  மீது பட்டு அதிலிருந்த எண்ணெய் அந்தத் துணியில் உறிஞ்சப்பட்டு இருந்தது இன்னொரு முனை அடுப்பில் நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருந்தது. இது பார்ப்பதற்கு இரவு நேரத்தில் நீண்ட நேரம் ஒளி தரக்கூடிய ஒரு பெரிய ஜோதியைப் போல இருந்தது. உடனே அந்தத் தமிழச்சி மனதில் ஒரு சிந்தனை பிறந்தது. அதுவே விளக்கு கண்டுபிடிக்க காரணம் ஆனது. ஆட்டாங்கல்லில் இருந்த ஆட்டப்பட்ட எள்ளை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதில் இருந்து எண்ணெய் வரக் கண்டு அதை ஒரு மண் விளக்கு அவசரஅவசரமாக களிமண்ணில் செய்து அதில் எண்ணெயை விட்டு அந்தத் துணியின் ஒரு பகுதியைக் கிழித்துத் திரியாக்கி தீபம் ஏற்றினாள். அது இரவு நேரத்தில் ஒளி கொடுத்தது. இப்படித்தான்  உலகின் முதல் தீபம் தோன்றியது.

உலகின் முதல் எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நாளை, தீபம் எனும் இரவு நேரத்தில் ஒளி தந்து நம் உணவு நேரத்தைத் எட்டு மணிக்குக் கொண்டு வந்த நிகழ்வை, உழைப்பதற்கு இரவின் முன்பகுதியில் நேரத்தை நீட்டித்துக் கொடுத்த அறிவின் திருநாளை, பொய்மைக் கதைகள் சொல்லி இப்போது வீணான நாள் - தேவையா தீபாவளி என்று கேட்போரே! எதற்கு பக்ரீத் என்று, எதற்கு நாற்பது நாட்கள் உபவாசம், புத்தாண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, புத்தபூர்ணிமா, என்று கேட்கத் தொடங்கினால் எப்போது தான் உழைக்கும் மக்கள் ஒரு வேளை சாப்பாடாவது நல்ல சோறாகச் சாப்பிடுவது?  அன்றாவது ஓர் ஏழை நல்ல உணவு சாப்பிட்டு விட்டு போகட்டுமே என்று கூட எண்ணத் தோன்றாதா நமக்கு என்று கேட்கிறேன்.

 தீப ஒளித் திருநாள் ஆக நாம் கொண்டாடி வருகிற தீபாவளி அன்று வரும் நட்சத்திரத்தன்று தான் இந்த நிகழ்வு நடந்தது. முன்பு நடந்த இந்தக் கதையைப் பின்னர் வந்த பலர் பலவிதமாக கூறிய கதைத் திரிபுகளால் தீபாவளி என்கின்ற அறிவின் திருநாள் மீது மாபெரும் கருப்பு மை பூசப்பட்டுவிட்டது.

உலகத் தமிழர்களே! உலக மனிதர்களின் திருநாளாகிய தீபாவளித் திருநாளை, புத்திசாலித்தனத்துடனும் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Comments

  1. மண்ணில் பிறந்த மானுடம் அனைத்தும் மனிதநேய பண்புகளால் நிலைபெற்று வாழக்கூடியவை. ஜாதி மதம் இனம் நிறம் என்று பேசுபவர்கள் மானுடம் என்று சொல்ல அருகதையற்றவர்கள்.... ஜாதி மத இன த்தை வேரறுப்போம்.... சமத்துவமாய் சகோதரத்துவம் ஆய் வாழ முன் செல்வோம்.... புலரும் தீபாவளி திருநாள், அனைவர் உள்ளங்களிலும் புத்தொளியாய் பிரகாசிக்கட்டும்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே. உலகத் தமிழர் கொண்டாட வேண்டிய உன்னதப் பண்டிகை தீபாவளி என்பதை உணர்த்த வேண்டும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

புதுக்கவிதை வரலாறு

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

லளழ வேறுபாடுகள்