மஞ்சள் நிற ரிப்பன் சிறுகதை
அலகு - 3
சிறுகதை
மஞ்சள் நிற ரிப்பன்
- ஏகாதசி ( இயக்குநர்)
சுத்துப்பட்டிகளுக்கும் செக்கானூரணி குட்டி நகரம். முகப்பு முழுக்க கடைகள்தான். வீடுகள் குறைவு. இங்கே பால் பன்னும், காராசேவும் ஃபேமஸ். நடமாடும் ஆட்களைவிட கசாப்புக் கடைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகம். இன்று திங்கட்கிழமை. காய்கறிச் சந்தை.
பொழுது சாயும் நேரமாதலால் ஊர் மஞ்சள் குளித்திருந்தது. தனமும் அவளது நாத்தனாரும் சந்தைக்கு வந்திருந்தனர்.
கருவாடு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாங்காய், தேங்காய், மொச்சைக்காய் என சகல காய்கறிகளையும் வியாபாரிகள் பெரும் குவியலாகக் குவித்திருந்தனர். தரமானவற்றை கிலோ கணக்கிலும் மட்டமானவற்றைக் கூறுகட்டியும் விற்றுக் கொண்டிருந்தனர். பொருட்கள் வாங்க வந்தோரை, கையைப் பிடித்து இழுக்காக் குறையாக வியாபாரிகள் தத்தம் கடைக்குக் கத்திக் கத்தி அழைத்தனர். சனம் செம்மறி ஆடுகள் போன்று மொதுமொதுவெனப் போவதும் வருவதுமாக இருந்தது. தனத்தின் நாத்தனார் உருளைக்கிழங்கையும் பீன்ஸையம் வாங்கி கட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தாள்.
தனத்தின் அப்பன் வீட்டு ஊர் கலுங்குப்பட்டி.
கலுங்குபட்டியில் வாழும் பல பெண்களுக்கு தனத்துக்குப் போன்றே செக்கானூரணி செல்வதே பெருங்கனவு. ஆனால் ஆண்களுக்கு செக்கானூரணி பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஆண் பிள்ளைகளைக் கலகலப்புக் கடைகளுக்கும், முடி வெட்டிவிட்டு குளிக்க நந்தவனத்துக்கும், குருசாமி நாடார் கடையில் துணி வாங்கி அளவு எடுத்துத் தைக்கப் போடவும் மற்றும் வடிவேல் தியேட்டரில் படம் பார்க்கவும் என அப்பாக்களால் ஆண் பிள்ளைகள் சகலத்தையும் பார்த்து அனுபவித்து மகிழ்கின்றனர். ஆனால் பெண்களால் கரிச்சட்டிகளோடும் சாணியோடும் புரண்டு கிடக்கத்தான் முடிகிறது.
தனம் உள்ளூரில்தான் வாக்கப்பட்டாள். அவளது கணவன் டூவீலர் மெக்கானிக். செக்கானூரணியில் கடை போட்டிருந்ததால் போக்குவரத்து வசதிக்காக அங்கேயே வாடகை வீடெடுத்துக் குடியமர்த்தியிருந்தான். தனத்தின் நாத்தனார் செல்வி, அவள் நாத்தனார் மட்டுமல்ல உயிர்த் தோழியும் கூட.
வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது தனத்தோடு தங்கித்தான் போவாள். தனத்துக்கு, தான் பார்க்க விரும்பி இருந்த ஊர் இது. எனவே இவளது கவனமெல்லாம் செக்கானூரணியை வேடிக்கை பார்ப்பதில் இருந்தது.
நான்கு ஐந்து படிக்கிற வயதுகளில் தனத்தின் அப்பா பொன்னாங்கன் இந்த ஊரிலிருந்துதான் காராசேவும் பேரிக்காயும் அடிக்கடி வாங்கி வருவார். இவள் வீட்டின் கடைக்குட்டி. மூத்த மகள் விசேஷத்துக்காக நான்கு ஆடுகளை ஓட்டிக்கொண்டு பொன்னாங்கன் சந்தை செல்லும்போது,
பிளாஸ்டிக் பிரோம் போட்ட தகர சிலேடு ஒன்றை வாங்கி வரும்படி தனம், தன் அப்பாவிடம் சொல்லியிருந்தாள்.
அவர் ஆடு விற்றுத் திரும்புகையில் அவிழ்த்த மொச்சையும், ஒரு பொட்டலம் எண்ணெய்ப் பலகாரத்தையும் மட்டுமே வாங்கி வந்திருந்தார். மொச்சையைத் தின்று கொண்டும், பலகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டும் வாங்கிவராத சிலேட்டுக்காக ஒரு பக்கம் அழுது கொண்டும்தான் இருந்தாள். சிலேட்டு வியாபாரி சாமிநாதன் செத்துப்போன விஷயத்தைச் சொன்னவுடன் அழுகை கொஞ்சம் அடங்கியது.
தனத்தின் வகுப்பாசிரியை, பரதநாட்டிய உடையில் விதவிதமாக எடுக்கப்பட்டிருந்த தன் மகளின் புகைப்படங்களை ஒரு நாள் மாணவர்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார். புகைப்படத்தில் இருந்த சிறுமிக்கும் அந்த வகுப்பு பிள்ளைகளுக்கும் ஒரே வயது தான். அந்தச் சிறுமியின் ஆடையையும், அழகையும், ஒப்பனையையும் பார்த்து வியந்தபடி இருந்தாள் தனம். எல்லாவற்றையும்விட அடுத்த ஒரு வாரமாக அவள் மனத்தில் ஆடிக் கொண்டிருந்தது அந்தச் சிறுமியின் சடைநுனியில் கட்டியிருந்த குஞ்சம்தான்.
எப்போதும் போல் அப்பாவிடம் வாங்கி வரும்படி மட்டும் சொல்லாமல், ஒரு தாளில் செக்கானூரணியில் உள்ள அந்தக் கடையின் பெயரை எழுதியும் குஞ்சத்தை வரைந்தும் கொடுத்தனுப்பினாள்.
மதியம் சந்தை சென்ற பொன்னாங்கன் மாலை வரை சுற்றிவிட்டு வியர்த்துப் போய் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். தொட்டித் தண்ணீரால் முகம், கை, கால்களைக் கழுவி விட்டு துண்டால் துடைத்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தார். அதற்குள் அவர் வாங்கி வந்திருந்த பேரிக்காய், காராசேவு, கிழவிக்கடை தட்டைப்பயிறு போன்ற குறைந்த விலைத் தின்பண்டங்களை எலிப்பொந்தை நாய் தோண்டுவதைப் போல் எடுத்து வெளியே போட்டுவிட்டு குஞ்சம் இல்லாததை கண்டு முகம் சுருங்கி, கண்ணீர் மிதக்க உட்கார்ந்திருந்தாள்.
என்னடா அப்பன் எப்பப் பாரு இப்படியே சொல்லுறாண்டு நெனக்காதம்மா. அந்தக் குஞ்சக் கடைக்காரப் பய மஞ்சக்காமால வந்து செத்து ஒரு வாரம் ஆச்சாம்மா. கடையை காலி பண்ணிக்கிட்டு அவன் பொண்டாட்டி வேற ஊருக்குப் போயிட்டாளாம்மா. நம்ம சாமி சத்தியமா இது பொய் இல்லம்மா. அதுக்காக சும்மா வந்துருவனா அப்பன்,' எனச் சொல்லியபடி சட்டையின் உள் பைக்குள் கை விட்டு
இரண்டு ரிப்பன் துணிகளை மடிப்புக் கலையாமல் எடுத்தார்.
அவை மஞ்சள் நிறத்தில் இருந்தன. அவற்றை அவள் வாங்கிக் கொள்ளவில்லை. அப்பாதான் வம்படியாக கைக்குள் திணித்தார். அவள் தம்பிடித்து வைத்திருந்த கண்ணீர் பொலபொலவென உதிர்ந்தது.
தனத்துக்குப் பதின்மூன்று வயதிருக்கும் போது ஒருமுறை முத்தம்மை போட்டுக் கிடந்தாள். கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சல். உடல் முழுவதும் முத்துக்கள். பேசக்கூட திராணியற்று அனத்திக் கிடந்தபோது தனத்தின் அப்பா, அழுது துடித்துப் போனார். தனத்தின் அம்மாதான் ஆறுதல் சொல்லித் தேற்றினார்.
வீட்டில் பைசா பணம் இல்லை. குப்பை விற்ற காசு வார தவணைக்கும் சாப்பாட்டுக்குமே சரியாய்ப் போனது. வேலையற்ற நேரம். மூன்றாவது தண்ணி ஊற்றியதில் குடும்பத்துக்கு நிம்மதிப் பெருமூச்சுதான் என்றபோது,
பிள்ள சொடிஞ்சு போயி வெரத்தெண்டியா ஒக்காந்திருக்கே...
காச்சி ஊத்த காக்கிலோ வெள்ளாட்டங்கறிக்கு
விதியத்துப் போணமே... கடன சொல்லியாச்சும்
அம்ம பாத்துக் கெடந்த கழுதைக்கு அஞ்சாறு
கறித் துண்டத்த
வேகவச்சுத் தண்ணியக் குடிக்க
வச்சுபுறலாமிண்டு பாத்தா... ஏங் கெட்ட நேரத்துக்கு,
கறிக்கடக்காரன் இன்øனைக்கு விடிக்காலந்தான்
மாரடப்பு வந்து செத்துப் போயிட்டானாம்... யாருகிட்ட
போயி என்னத்தச் சொல்லி அழுறதுண்டு தான்
இந்தப் பருப்பையும் காத்திரிக்காவையும் வாங்கியாந்தேன்'
என்று சொல்லி உள்ளேயும் வெளியேயும் வெம்பினார்.
அப்போதெல்லாம் வீடுகளில் ஒரு நேரத்து உலைதான்.
அதற்குத் தயாராக குடும்பமே உடல்களைக் கரைக்க வேண்டியிருந்தது. தனத்தின் பெரிய அக்காள் விருமாயி குவாரியில் கல் உடைத்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு செக்கானூரணி வரை நடந்தே சென்று கேழ்வரகும், கர்க்காகுறுணையும் வாங்கிக் கொண்டு கலுங்குப்பட்டி வந்து சேர்வாள். பசியால் மயங்கிக் கிடக்கிற மற்ற சீவன்கள் விருமாயி அக்காள் வருவதை ஒரு மøல் தூரத்துக்கு முன் பார்த்துவிட்டாலே மகிழ்ந்து போவார்கள். உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சம்பாத்தியம் இல்லை. குவாரியில் ஓனர் கல் கணக்கை ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் உரலில் பச்சை நெல்லைக் குத்தித் தான் ஆக்கி உருண்டை திரட்ட வேண்டும்.
அதே ஊருக்குள் பணம் பெருத்த ஆட்களும் இருக்கத்தான் செய்தார்கள். தனத்தின் தாய்மாமன் கூட அப்படிப்பட்ட ஆள்தான். தனத்தின் அக்காவை தன் ஒரே மகனுக்கு மணமுடித்துக் கொடுக்காததால் இந்தக் குடும்பத்தோடு தொடர்பறுத்து இருந்தார். அதே செக்கானூரணியில் உள்ள அத்தனை ஓட்டல் கடைகளுக்கும் பலகாரக்கடைகளுக்கும் அவர் யப்பா நான் பெத்து வச்சிருக்கிறது ஒரே பிள்ள... எங்ககிட்ட கோவிச்சுக்கிட்டு என்னைக்காச்சும் தட்டுத்தடுமாறி இங்கிட்டு வந்திட்டா நீங்கதானப்பா பாத்துக்கிறணும், எங்க சுத்திலும் எம்புள்ள பட்டினியா கெடந்திரப்பிடாது. அவன் முகம் வாடக்கூடாது. அவன் கை நீட்டுறத குடுத்துருங்க. கணக்கு லச்ச ரூபா வந்தாலும் நான் பாத்துக்கிறேன்' என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அன்றைய காலகட்டத்திலேயே.
தனத்தின் அப்பா பொன்னங்கன் சிறு வயதிலிருந்தே ஓய்வில்லாமல் உழைத்தவர்.
வயதும் முதிர்ந்து கொண்டிருப்பதால் முன்னைப் போல சம்மட்டி தூக்கி அடிக்கவோ, வயல்கரையில் மண்வெட்டி தூக்கி வெட்டவோ முடியவில்லை. இருப்பினும் அவர் சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்துதான் குடும்பத்தை நடத்தினார். பிள்ளைகளும் தகப்பனுக்குக் கைகொடுக்கும் அளவுக்கு வயதும் பக்குவமும் இல்லை.
தனமும் செல்வியும் கட்டைப் பை நிறைய சாமான்களை வாங்கிக் கொண்டு புளியமரத்தடி பருத்திப்பால் கடையில் இரண்டு பருத்திப்பால் வாங்கிக் குடித்தனர்.
ஏலக்கா நெறய போட்டிருக்காகல்ல மதினி' எனச் செல்வி சொல்ல, ஆமா' என்பது போல் தலையாட்டிக் கொண்டே யதார்த்தமாய்த் திரும்பியவளுக்கு, தெற்கே மாலைக் கடைக்கருகில் அழகி என்ற பெயர்ப் பலகை தென்பட்டது.
சிறு சந்தேகத்தில் நாத்தனாரைக் கூப்பிட்டுக் கொண்டு அந்தக் கடை அருகில் சென்றாள்.
அழகி'க்கும் கீழே பேன்சி ஸ்டோர்' என்றும் இருந்தது.
சிறு வயதில் மஞ்சள் காமாலையில் செத்திருந்த ஓனர் நெற்றியில் விபூதி பூசி பக்திமயமாக வாய் நிறைய சிரித்துக் கொண்டிருந்தார். அவள் மனத்துக்குள் இன்றும் ஆடிக் கொண்டிருக்கும் குஞ்சம் போல் பல குஞ்சங்கள் அந்தக் கடையில் தொங்கிக் கொண்டிருந்தன.
வாங்க ஆசைதான், எனினும் அப்பாவின் விருப்பப்படியே அந்தக் கடை இல்லாததுபோல் நினைத்துக் கொண்டு பக்கத்துக் கடையில் இரண்டு மஞ்சள் நிற ரிப்பனை வாங்கினாள். அவை அழகாய் இருந்தன ஆவாரம் பூப்போல.
வடிவேல் தியேட்டருக்குப் பின்னால் வீடு. பத்து நிமிஷ நடைதான். மெல்ல நடந்து சென்றனர். கைச்சுமையை மாற்றிக் கொள்ளாமலேயே கண்களில் நீர் இறைத்தபடி தனம் நடந்தாள். அந்நாளில் தனத்தின் அப்பா செத்துப் போனதாய்ச் சொன்ன குஞ்சக் கடைக்காரர் மட்டுமல்லாமல் கறிக்கடைக்காரர், சிலேட்டுக் கடைக்காரர் உட்பட அத்தனை பேரும் உயிரோடிருந்தனர். அவளது அப்பாதான் செத்திருந்தார்.
- ஏகாதசி
Comments
Post a Comment