வினா விடை வகைகள்


வினா என்பது

 ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி. ஒருவர் இன்னொருவரை வினவுதல் வினா எனப்படும். 



வினா வகை

அவ்வினா ஆறு வகைப்படும்.

அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா,ஏவல் வினா என வினா ஆறுவகைப்படும். 



1.அறிவினா

ஒரு வினாவிற்குரிய விடையைத் தமக்குத் தெரிந்திருந்தும், அவ்வினாவிற்குரிய விடையைப் பிறரும் அறிந்துளரா என அறியும் பொருட்டு வினவும் வினா அறி வினா ஆகும். 

    ஆசிரியர் தம் மாணவரிடம் இச்செயுளுக்குப் பொருள் யாது என வினவுதல்.

ஆசிரியர் தம் மாணவரிடம் திருக்குறளை இயற்றியவர் யார் ? எனக் கேட்டல்.



2.அறியா வினா

தாம் அறியா ஒன்றை, அறிந்துகொள்ளவேண்டி, அதனை அறிந்தாரிடம் வினவுதல் அறியா வினா எனப்படும்.

3.ஐய வினா 

தனக்கு ஏற்பட்ட ஐயத்தைக் (சந்தேகம்) தீர்த்துக் கொள்வதற்குக் கேட்கப்படும் வினா - ஐய வினா
(எ.கா.) தூரத்தில் வருவது எருதோ? பசுவோ? 



4.கொளல் வினா 

ஏதேனும் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும்பொருட்டு, கேட்கும் வினா கொளல் வினா எனப்படும்.

எ.கா:

    மளிகைக்கடைக்காரரிடம் வணிகரே! சர்க்கரை உள்ளதோ? என வினவுவது.



5.கொடை வினா 

தம்மிடம் உள்ள ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கக் கருதி கேட்கும் வினா.

அரசன், புலவரிடம் பொருள் உள்ளதோ? எனக் கேட்பது?



6.ஏவல் வினா

ஒரு செயலைச் செய்ய ஏவும் பொருட்டு வினவும் வினா ஏவல் வினா ஆகும்.

இதை நீ செய்வாயா? என கேட்பது.





விடை வகைகள்

விடை வகைகள்
விடை எட்டு வகைப்படும்.

சுட்டுவிடை
மறைவிடை
நேர்விடை
ஏவல்விடை
வினாஎதிர்வினாதல்விடை
உற்றதுரைத்தல்விடை
உறுவதுகூறல்விடை
இனமொழிவிடை
சுட்டுவிடை”சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.
‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ’ என்று விளக்கம் கருதிக் கூறும் விடை முதலியன சுட்டுவிடை ஆகும். 

மறைவிடை ( எதிர் மறுத்துக் கூறல் விடை)
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யேன்’ என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாட வில்லை’ எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.

இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.

நேர்விடை ( உடன்பட்டுக் கூறுதல்)
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன்’ என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.

நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன்’ எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.

ஏவல்விடை
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது , ஏவல்விடை.

வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வதுஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை எனப்பட்டது.

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது ஏவல்விடை எனப்படும். 

வினாஎதிர்வினாதல்விடை
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனோ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை.

வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும். 

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா’ என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை எனப்படும். 

உற்றதுரைத்தல்விடை
”இது செய்வாயா?” என்று வினவிய போது, ’உடம்பு நொந்தது’ என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை.

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.

உறுவதுகூறல்விடை
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’கை வலிக்கும்’ எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.

இனமொழி விடை
”ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன்’ என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை.

ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.

‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என விடை தருதல்.

சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை(செவ்வன் இறை). மற்ற ஐந்தும் வினாக்களுக்குரிய விடையைக் குறிப்பால்(இறை பயப்பன) உணர்த்துவன.

நன்னூல் பாடல்
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் 
உற்றது உரைத்தல் உறுவது கூறல் 
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி 
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப (நன்னூல் - 386) 

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை வரலாறு

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

லளழ வேறுபாடுகள்