புதுக்கவிதை வரலாறு

 

புதுக்கவிதை யின் வரலாறு 


புதுக்கவிதை:
 கவிதை எனப்படுவது சொற்களில் உணர்ச்சியும், கற்பனையும் கொண்டு இயற்றப்படுவதாகும். இதில் உணர்ச்சிகள் நயமாக காட்டப்படும். கவிதை இரு வகைப்படும். மரபுக் கவிதை மற்றொன்று புதுக்கவிதையாகும். புதுக்கவிதை என்பது மரபுக்கவிதையைவிட ஒரு சில கூறுகளில் மாறுப்பட்டதாகும்.

இவ்வளவு அடிகளில் தான் பாட வேண்டும் என்ற கட்டுப்பாடு புதுக்கவிதைக்கு இல்லை. இந்தப் பா வகையில் தான் பாட வேண்டும் என்ற மரபும் இல்லை. எதையும் எவ்வளவு அடியிலும் எவரும் பாடலாம் என்பதே புதுக்கவிதயின் தனிச்சிறப்பாகும். எனவே தான்,



இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை (ஊர்வலம்)


                            என்று, புதுக்கவிதைக்கு இலக்கணமாக மு.மேத்தா கூறுகிறார். 

புதுக்கவிதை படிப்பதற்கு எளிமையாக இருக்கும். அதனையடுத்து, புதுமையுடன் வாசகர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டிருக்கும். புதுக்கவிதையைப் படிக்கும் பொழுது பெரும்பாலான மக்களுக்கு அது புரியும் வண்ணமாகவே அமைகின்றது. மக்கள் பேச்சு வழக்கைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, சொற் சுருக்கத்தையும் உள்ளடக்கியதே புதுக்கவிதையாகும்.



புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
· ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு ‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·        

     “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார் பாரதி. Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன்,இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’ ‘லகு கவிதை’ ‘விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.



புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1. மணிக் கொடிக் காலம்
2. எழுத்துக் காலம்
3. வானம்பாடிக் காலம் 
                ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின.

1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகியஇதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன. இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன், க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக்கதாநாயகர்களாக விளங்கினர்.

 2.. எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்திஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா, க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி,முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்

 

சுப்பிரமணிய பாரதி:

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 



ந. பிச்சமூர்த்தி:

ந.பிச்சமூர்த்தி தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப்புதுக்கவிதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி     
 கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை, கிளிக்கூண்டு, காட்டுவாத்து, புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி), காதல்(இவரின் முதல் கவிதை), உயிர்மகள்(காவியம்), ஆத்தூரான் மூட்டை ஆகியவை இஅவரது படைப்புகளாகும்.
.

கவிஞர் மீரா:
மீரா என்ற மீ. ராசேந்திரன் . மீ.இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், மன்னர் நினைவில், கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள், ஊசிகள், கோடையும் வசந்தமும், குக்கூ. போன்ற கவிதைகளால் புதுக்கவிதை வளர உதவியவர். நறுக்கு தெறித்தாற்போல் தம் கவிதைகளின் வழி சமூகப் பிரச்சினைகளை சாடியவர். 


அப்துல் ரகுமான்:
அப்துல் ரகுமான், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப்புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.


மு. மேத்தா:

மு. மேத்தா (முகமது மேத்தா) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். வானம்பாடி கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர். உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். 

    இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.

நா.காமராசன்
நா. காமராசன் (1942 - மே 24, 2017) தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனக்கவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கப்பட்டவர், கறுப்புமலர்கள், சூரியகாந்தி, தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், மலையும் ஜீவநதிகளும், கவியரசு நா. காமராசன் கவிதைகள் போன்றவை இவர் எழுதிய படைப்புகள் ஆகும்.


வைரமுத்து:

வைரமுத்து , திருத்தி எழுதிய தீர்ப்புகள் எனும் புதுக்கவிதையின் வழியாக தமிழ்க் கவிதையுலகில் அறிமுகமானவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களில் மிக முக்கியமான கவிஞர் இவர். தண்ணீர்த் தேசம், தமிழுக்கு நிறமுண்டு, மௌனத்தின் சப்தங்கள் போன்ற புதுக்கவிதை நூல்களைப் படைத்தளித்து புதுக்கவிதை வளர துணைசெய்தவர். இவர் கவிராஜன் கதை என்ற படைப்பின் வழியாக பாரதியின் வரலாற்றை புதுக்கவிதையில் வடித்தார்.


சிற்பி. பாலசுப்ரமணியன் 
புதுக்கவிதை எழுதியோரில் குறிப்பிடத்தக்கவர். வானம்பாடி கவிஞர்களுள் ஒருவர். 

நா.முத்துக்குமார்
தமிழில் சிற்ப்பாக புதுக்கவிதை படைத்து வந்தவர். நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற நூல்களை எழுதினார். 

பா.விஜய். 

உடைந்த நிலாக்கள் எனும் கவிதை நூல் வழி அறியப்பட்டவர் இவர். இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். 

இளைய கம்பன், ஞானி, அக்னிபுத்திரன், வண்ணதாசன், கபிலன், பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.



முடிவுரை:

நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.

ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன. 

Comments

Popular posts from this blog

தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

லளழ வேறுபாடுகள்