தலைமை தாங்கும் தமிழ் - உவமைக் கவிஞர் சுரதா

தலைமை தாங்கும் தமிழ் முன்னுரை : சுரதா (23, நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். இவர் இயற்றிய தலைமை தாங்கும் தமிழ் என்ற கவிதை குறித்து இங்கு காண்போம். உலகத்தின் தலைமை மொழி: படுத்திருக்கும் வினாக்குறிப்போல் மீசை வைத்த பாண்டியர்கள் வளர்த்த மொழி கடலின் நீரை உடுத்திருக்கும் உலகத்தில் தலைமை தாங்கும் உயர்ந்த மொழி என்று தமிழ் மொழியை உயர்வாகப் பாடுகிறார் உவமைக் கவிஞர் சுரதா. மூவேந்தர்களில் முதல் வேந்தராகியப் பாண்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்கள். வீரத்தின் அடையாளமாக தங்கள் முகத்தில் அவர்கள் வைத்திருக்கும் மீசை ஒரு வினாக்குறி படுத்திருப்பது போல இருக்கும் என்று தனக்கே உரிய உவமைக் கவிதையில் வர்ணிக்கிறார். அத்தகைய பாண்டியர்கள் தங்கள் உயிருக்கு நிகராகப் போற்றி பாதுகாத்து வளர்த்து வந்த மொழி தமிழ் மொழி என்பதையும் கடல் நீரை ஆணையாக அணிந்திருக்கும் இந்த நிலவுலகத்தை தலைமை தாங்கி நடத்தும் மிகப் பெரிய மொழி தமிழ் எனவும் கவிஞர் கூறியிருப்பது பாராட்டத்தக்கதாகும். உலகின் பிற மொழிகளுக்கு தன் அருமையான சொற்களை வாரி வழங்கிய வள்ளல் மொழி தமிழ் என்று தமிழை இவர் பாராட்டுகிறார். வன்மை எனும் வலிமையும் மென்மை எனும் இளமையும் இனிமையும் கொண்டு உலகில் தன்னிகரற்ற மொழியாக வலம் வரும் மொழி தமிழ் என்று சுரதா பாடியிருப்பது தமிழின் சிறப்பை உணர்த்துகிறது. குமரிக்கண்டம் போற்றிய மொழி என்றும் காப்பியங்களைத் தன்னகத்தே கொண்ட உலகில் முதன் மொழி தமிழ் என்றும் ஆதி மொழி அறிவில் மூத்த மொழி வள்ளுவரைத் தம்மிடம் கொண்டு இலங்குகிற மொழி என்றும் இவர் பாராட்டுகிறார். குறிப்பிடப்படுகிறார். வையத்தில் தமிழே தலை: மலர்கள் தோன்றிய பிறகே தேன் அதில் உற்பத்தியாகிறது. வானம் தோன்றிய பிறகே திசைகள் தோன்றுகிறது. குளங்கள் தோன்றிய பிறகே மீன்கள் முதலான நீர்வாழ் உயிரினங்கள் குளத்தில் தோன்ற முடியும். அது போல் தேன் போன்ற அமுத மொழிகள் கொண்ட தமிழ் பிறந்த பிறகே உலகினர் பேசும் பிற மொழிகள் தோன்ற முடியுமே தவிர பிற மொழிகள் முதலில் தோன்றவில்லை என்று எடுத்துரைக்கிறார் சுரதா. முடிவுரை: தேன் சுரக்கும் தமிழ் பிறக்கும் முன்பே மற்ற தேசத்தார் பேசுமொழி பிறக்கவில்லை வான் பிறக்கும் முன் காற்று பிறந்ததுண்டோ? வையத்தில் தமிழ் போலும் சிறந்ததுண்டோ ? என்று வினவி, தமிழ் தான் உலகில் ஆதியில் தோன்றிய மொழி என்றும் மற்ற மொழிகள் தமிழுக்கு முன் தோன்றின என்று கூறுவது இயற்கைக்கு முரணான சொல்லாடல் என்றும் கூறி தமிழின் சிறப்பை உவமைக் கவிஞர் சுரதா இக்கவிதையில் எடுத்துரைக்கிறார்.

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை வரலாறு

லளழ வேறுபாடுகள்